யாகம் செய்தால் யோகம் வரும் ! சர்வதேச விசாரணை வருமா ?

Written By piramyd on Tuesday, May 15, 2012 | 8:14 AM


முள்ளிவாய்க்காலில் இறந்த ஈழத்தமிழ் மக்களுக்காக, கோவில்களில் பூசைகள் நடக்கிறது. அங்கே மாண்டுபோன மக்களுக்காக ஆத்மசாந்திப் பூசைகள் நடக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் யாகம் நடக்கிறதே அது தான் ஏன் என்று தெரியவில்லை ! கனடாவில் தம்மை நாடு கடந்த அரசின் பிரமுகர்கள் என்று கூறிக்கொள்வோர் சிலர், முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்காக ருத்திர மகா யாகம் ஒன்றை நடத்தியுள்ளனர் என்ற செய்தி பரவலாக அடிபடும் விடையங்களில் ஒன்று. அது சரி இதில் என்ன பிழை இருக்கிறது என்று நீங்கள் கேட்க்கலாம். சைவநெறியில், வரங்களை அல்லது யோகங்களை வேண்டி நடத்தப்படுவதே யாகம் என்று அழைக்கப்படுகிறது. யாகம் என்றால் தீ மூட்டி மந்திரங்களை ஜெபித்து, ஒரு கடவுளை வேண்டி நடத்தப்படுவது என்று பொருள். இதனைச் செய்வதன் மூலம் ஒருவர் வேண்டும் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

இறந்த மனிதர்களுக்கு பிண்டம் வைத்து, அவர்களுக்கான பிதுர் கடன் கழிப்பது, இல்லையேல் மோச்ச அரிச்சனை செய்வதும் ஒருவகை. இல்லாது போனால் ஆத்மசாந்திப் பிரார்த்தனை- பூஜைகள் நடத்தி இறந்தவர்கள் சொர்க்கம் செல்லவேண்டும் எனப் பூஜிப்பது இந்து சமய வழிமுறையாகும். ஆனால் இறந்த மனிதர்களுக்கு யாகம் நடத்துகிறோம், அதுவும் ஏகாதச உருத்திர யாகம் என்பது வரைமுறையில் இல்லாத ஒன்று. ருத்திரா என்றால் சிவன் என்று பொருள்படும். ஆனால் இங்கே ருத்திரா என்று நாடு கடந்த தமிழீழ அரசு எதனைக் குறிப்பிடுகிறது என்று தான் எனக்குத் தெரியவில்லை. யாகம் நடத்தினால் வரங்கள் கிடைக்கும் ! யோகங்கள் கிடைக்கும் ! மழை வரும் ! அரக்கர்கள் கூட யாகம் செய்து அழியா வரம் பெற்றனர் ! ஆனால் தற்போது யாகம் செய்தால் சர்வதேச சுயாதீன விசாரணை வருமா ? அது தான் கேள்வியாக உள்ளது !

இறந்த மக்களுக்கு ஆத்மசாந்திப் பூஜைகளை நடத்தினால், அதுவே நன்மை பயக்கும். அதை விடுத்து ருத்திர யாகம் நடத்தினோம், ஏகாதச யாகம் நடத்தினோம் என்று அறிக்கை விடுவதன் மூலம் சைவப் பெருமக்களையும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் தம்பக்கம் இழுக்க நாடு கடந்த அரசு மேற்கொள்ளும் முயற்சியாக இது இருக்கிறது என்ற சந்தேகமே வலுக்கிறது. இதனையே சுட்டிக்காட்ட நாம் விரும்புகிறோம். மதத்தின் பெயரால் இல்லையேல் கடவுளின் பெயரால், சாதாரண மனிதர்களை தம்வசப்படுத்துவது ஈனர்கள் செய்யும் செயலாகும். அதிலும் ஆகமங்கள் போதிக்கும் தர்மங்களை விடுத்து, சைவசமயத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இறந்த மக்களுக்கு யாகம் செய்தோம் என்று இவர்கள் தெரிவிப்பது படு முட்டாள் தனமான காரியம் ஆகும்.

இது கடவுளுக்கே அடுக்காத காரியம் என்று நான் கருதுகிறேன். ஒரு இடத்தில் கூட்டம் வைத்தால் அதில் மக்கள் அதிகம் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தால், ஒரு நமீதாவையோ இல்லை புன்னகை அரசி சினேகாவையோ அழைத்து கூட்டத்தை களைகட்ட வைப்பது இல்லையா ! அதுபோல தமது பெயர் ஓங்கவேண்டும் என்பதற்காக சைவநெறிகளை மீறிச் செயல்படும் எவரை நான் கண்டிக்கத் தயங்குவதே இல்லை. அதனால் அதிர்வுக்கு இக் கடிதத்தை எழுதுகிறேன். இதனைப் பிரசுரிக்குமாறு வேண்டி நிற்கிறேன். சைவச் சித்தர்கள், புரோகிதர்கள் இல்லையேல் ஆகமம் தெரிந்தவர்கள் நான் எழுதியது பிழை என்று நினைத்தால், இல்லையேல் கருத்து வேறுபாடுகள் இருந்தால் என்னை கீள் காணும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பின் குறிப்பு:

யாகங்கள் 21 வகைப்படும்: அவையாவன , அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உத்தியம், சோடசம், வாசபேயம், அத்திசாத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினிதோத்திரம், தரிசுபூரணமாசம், சாதூர்மாசியம், நிரூடபசுபந்தம், ஆக்கிரணம், சௌத்திராமணி, அட்டகை, பார்வணம், சிரார்த்தம், சிரவேணி, ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆசுவயசு என்னும் இருபத்தொன்றுமாம்.

இதில் ருத்திர யாகம் என்று உண்மையில் ஒன்றும் இல்லை. இல்லாத யாகத்தை ஏன் நடத்தவேண்டும் ?

இவன்:

ஸ்ரீல ஸ்ரீ சங்கர நந்தித சுவாமிகள்(அடையார்- சென்னை)
No 2
First Street,
Bhaktvatsalam Nagar,
Adyar, Chennai.600020.

இங்கே நந்தித சுவாமிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் அதிர்வு இணையத்தின் கருத்து அல்ல. சைவநெறிகள் தெரிந்த சுவாமிகளின் கருத்தை நாம் பிரசுரித்துள்ளோம்.